சீனாவில் திடீரென்று வெடித்த மக்கள் போராட்டம்: கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தீவிர கட்டுப்பாடுகளுக்கு தற்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலால் உலக நாடுகளில் இதுவரை 64.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக புதிய தகவல் வெளியாகிவருகிறது.
சீனாவில் தினசரி 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையைத் தொடும்வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் இந்த தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த வாரம் காங்சாவோ நகரத்தில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சாலையில் போராட்டம் நடத்தினர். எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இறக்கவும் தயார் என்று சீன அரசை நோக்கி எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.
ஆனால், மக்களின் போராட்டத்துக்கு இதுவரை சீன அரசின் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.