அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 75% வரி ; சீனா அதிரடி
சீனா நாட்டு அரசு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை திடீரென உயர்த்தி இருக்கிறது.
குறிப்பாக தொழில்துறையில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு 75 சதவீதமாக இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள்
இதன்படி அமெரிக்கா ,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 3.8 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரை இறக்குமதி வரை விதிக்கப்படும். திங்கட்கிழமை முதலே இது அமலுக்கு வந்துவிட்டது.
அண்மையில் சீன நாட்டின் வணிகத்துறை அமைச்சகம் நடத்திய விசாரணையில் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி வாயிலாக பிளாஸ்டிக் பொருட்கள் சீனாவை வந்தடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலிஃபார்மல் டைஹைட் கோபாலிமர் (polyformaldehyde copolymer) பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து சீனா வருகிறதாம். வாகன பாகங்கள், மருத்துவம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருளான கோபாலிமர் அதிக அளவில் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மூலமே சீனாவில் குவிகிறதாம். இது உள்நாட்டு தொழில்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தான் இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோ பாலிமர் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி திங்கட்கிழமை முதலே அது நடைமுறைக்கு வந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தான் அதிகபட்சமாக 74.9% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 34.5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 32.6 சதவீதமும் தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலிபிளாஸ்டிக் பொருள்களுக்கு 3.8 சதவீதமும் என வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு சீனா 35.5 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
கோ பாலிமர்கள் பொதுவாக காப்பர் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்களுக்கு பதிலாக தொழில்துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வாகன உதிரி பாகங்கள், மின்னணு சாதனங்களில் எல்லாம் காப்பர் மற்றும் துத்தநாகம் பயன்படுத்த வேண்டிய இடங்களில் இவ்வகை பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டு அது தற்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி விதிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சில நாட்களில் தெரிய வரும்.