பச்சிளம் குழந்தைகளை தாயிடமிருந்து பிரிக்கும் சீனா! கதறி அழும் சிசுக்கள்
தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதால் தாயிடமிருந்து பிரித்து வைத்து சிகிச்சையளிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சீனத்தின் ஷாங்காய் மாகாணத்தில், குழந்தைக்கும் தாய்க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், குழந்தைகள் தனியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் வரை குழந்தைகளுக்கான கொரோனா மையங்களில் வைக்கப்படுவதாகவும், பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
சீனாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், வணிக நகரமாகவும் விளங்கும் ஷாங்காயில், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த தகவல் எங்கிருந்தும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சீனாவில் இயங்கும் சில சமூக வலைத்தளங்களில், குழந்தைகள் தனிமைப்படுத்தும் மையங்களில் அழுதுகொண்டே இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
ஒரு படுக்கையில் தலா மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பிறந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு அறையில் சுமார் எட்டு குழந்தைகள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஒரு பராமரிப்பாளர் கூட இல்லாத புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
அதன்போது பிரித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையைப் பற்றி எந்த தகவலும் பெற்றோருக்கு கிடைப்பதில்லை.
குழந்தை அனுமதிக்கப்படும்போது குழந்தை நன்றாக உள்ளது என்ற குறுந்தகவலைத் தவிர வேறு எந்த ஒரு தகவலையும் அறிவிப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
