அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தல் ; சீனாவை குற்றம்சாட்டும் ட்ரம்ப்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு சீனாதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதுதொடர்பாக சீன ஜனாதிபதியிடம் நேரில் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடுமையான கட்டுப்பாடுகள்
இந்த நிலையில், அமெரிக்காவில் ‘பென்டனைல்’ என்ற கொடிய போதைப்பொருளின் பயன்பாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போதைப்பொருள் சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
‘சீன ஜனாதிபதியை சந்திக்க உள்ளேன். அவரிடம் நான் கேட்கப்போகும் முதல் கேள்வியே பென்டனைல் போதைப்பொருள் குறித்துதான். எங்களது நாட்டுக்குள் பென்டனைலை விற்பதன் மூலம் அவர்கள் 100 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார்கள். ஆனால் எங்களது 20 சதவீத சுங்க வரியால் அவர்கள் 100 பில்லியன் டொலரை இழக்கிறார்கள்.
தற்போது அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ துறைமுகங்களில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, வெனிசுலா நாட்டை இடைத்தளமாகப் பயன்படுத்தி சீனா, அமெரிக்காவுக்குள் பென்டனைலை கடத்துகிறது.
இது தொடர்பாக வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தரைவழி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். போர் பிரகடனத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களை கொல்லப் போகிறோம்’ என்று கூறினார்.
இந்நிலையில் தென் கொரியாவின் பூசான் நகரில் வரும் 30ஆம் திகதி நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.