கனடாவில் இந்த வகை வாகனம் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் ஜீப் வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பேட்டரி தீ அபாயம் காரணமாக 375,000-க்கும் மேற்பட்ட ஜீப் (Jeep) பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
இதில் கனடாவில் மட்டும் 20,753 வாகனங்கள் உள்ளன என கனடிய போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

பேட்டரிக்குள் கோளாறு
இந்த திரும்பப்பெறல் 2022 முதல் 2025 வரை உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் கிரான்ட் செரோக்கி ஹைபிரிட் மாடல்களையும், 2021 முதல் 2025 வரை தயாரிக்கப்பட்ட ஜீப் வெரென்லர் ஹைபிரிட் மாடல்களையும் பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வாகனங்களில் உயர் மின்னழுத்த பேட்டரிக்குள் கோளாறு ஏற்பட்டு, வாகனம் நிறுத்தப்பட்ட நிலையிலும் தீ பற்றும் அபாயம் உள்ளது என கனடிய போக்குவரத்துத்துறை தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்களை மின்சாரம் நிரப்ப வேண்டாம், மேலும் வீட்டுக்கு வெளியே, மற்ற வாகனங்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பிரச்சினைக்கு தீர்வு காணும் பழுதுபார்த்தல்கள் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் தரவுகளை ஆய்வு செய்தபோது 19 தீ விபத்துகள் கண்டறியப்பட்டதாக நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேட்டரி மின்சாரம் முழுமையாக காலியாக இருந்தால் தீ அபாயம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.