உக்ரைனில் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்ட கனடிய முன்னாள் அமைச்சர்
கனடாவின் முன்னாள் துணை பிரதமரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலண்டை உக்ரைனின் பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் நடைபெறும் போரின் சூழலில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஃப்ரீலண்ட், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின்னர் தவறவிடப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால், உக்ரைன் ஒரு வலிமையான பொருளாதார சக்தியாக மாற முடியும் என்று முன்பே தெரிவித்திருந்தார்.

கனடாவின் சிறப்பு பிரதிநிதி
உக்ரைன் தனது உள்நாட்டு தாங்குதிறனை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக செலென்ஸ்கி,கூறினார்.
“முதலீடுகளை ஈர்ப்பதும், பொருளாதார மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதும் தொடர்பாக கிறிஸ்டியா மிகுந்த அனுபவமும் திறனும் கொண்டவர்,” என அவர் குறிப்பிட்டார்.
தூதரக முயற்சிகள் விரைவில் பலனளித்தால் உக்ரைனின் மீட்புக்காகவும், கூட்டாளிகளின் தாமதம் காரணமாக போர் நீடித்தால் எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும், உக்ரைன் தனது உள்நாட்டு உறுதியை பலப்படுத்த வேண்டும் என செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய வம்சாவளியைச் சேர்ந்த ஃப்ரீலண்ட், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசில் அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றியவர். தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் மறுசீரமைப்புக்கான கனடாவின் சிறப்பு பிரதிநிதியாக அவரை நியமித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் அமைச்சரவையிலிருந்து விலகிய ஃப்ரீலண்ட், இன்னும் டொரோண்டோவில் உள்ள யூனிவர்சிட்டி–ரோஸ்டேல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் முன்பே அறிவித்துள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டைத் தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற கல்வி அறக்கட்டளையான ரோட்ஸ் டிரஸ்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) ஃப்ரீலண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியைத் தொடர்ந்து அவர் ஜூலை 1 முதல் ஆக்ஸ்போர்டுக்கு இடம்பெயர உள்ளார்.