வெளிநாடொன்றில் பயங்கர சம்பவம்: 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மாலி நாட்டில் உள்ள தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (19-01-2024) ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இவ்வாறானவொரு நிலையில், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.