அமெரிக்கா போர்விமானங்களில் நாடு கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள்; ஏற்க மறுத்த கொலம்பியா
அமெரிக்கா நாடு கடத்திய குடியேற்றவாசிகளை கொலம்பியா ஏற்க மறுத்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கு எதிராக 25வீத வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்திய நிலையில் , குடியேற்றவாசிகளை ஏற்பதற்கு கொலம்பியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா குடியேற்றவாசிகளை ஏற்பதற்கு இணங்கியுள்ளதை தொடர்ந்து அந்த நாட்டிற்கு எதிராக வரிகளை விதிப்பதை டிரம்ப் இடைநிறுத்திவைப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை
அதேவேளை முன்னதாக வாரஇறுதியில் குடியேற்றவாசிகளுடன் வந்த அமெரிக்க விமானங்களை ஏற்கப்போவதில்லை என கொலம்பிய அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் கொலம்பியாவை எச்சரித்திருந்தார்.
கொலம்பியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுப்பேன் என சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்த டிரம்ப் முதலில் கொலம்பியாவிலிருந்து வரும் பொருட்களிற்கு 25 வீத வரிகளை விதிக்கப்போவதாகவும் ஒரு வாரத்திற்கு பின்னர் அதனை 50 வீதமாக அதிகரிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு அமெரிக்காவிற்குள் கொலம்பியா அனுப்பிய குற்றவாளிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான சட்டபூர்வமான கடப்பாட்டை கொலம்பிய அரசாங்கம் மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கொலம்பிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் சகாக்களின் விசாக்களை உடனடியாக இரத்து செய்வதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்திருந்த கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்ரோ, உங்கள் தடைகள் எங்களை அச்சுறுத்தாது என தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் அமெரிக்காவின் பொருட்களிற்கு கொலம்பியா 50 வீத வரிகளை விதிக்கும் எனவும் கொலம்பிய ஜனாதிபதிதெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் விசா இரத்து குறித்து தெரிவித்திருந்த கொலம்பிய ஜனாதிபதி உங்கள் நாட்டிற்கு பயணம் செய்வதற்கு எனக்கு விருப்பமில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா தனது பொருளாதார பலம் திமிர் ஆகியவற்றை பயன்படுத்தி என்னை பதவியிலிருந்து அகற்ற முயலும் என கொலம்பிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதேவேளை கொலம்பியா அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்வது,உட்பட டிரம்பின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை பின்னர் தெரிவித்துள்ளது.