கனடாவில் கருத்தடை மாத்திரைகள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் விற்பனை செய்யப்படும் இரண்டு வகை கர்ப்பத்தடுப்பு மாத்திரைகள் பாக்கேஜிங் பிழை காரணமாக மீளப்பெறப்பட்டுள்ளன.
ஒரு பயனர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மீளப்பெறுதல் (recall) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், ஒரு பெட்டியில் “முழு பிளிஸ்டர் அட்டை (blister card) ஒன்று காணவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிறுவனம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் கீழ்க்கண்ட தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டன:
• Seasonique – DIN 02346176, காலாவதி 07/2027, லாட் எண்கள்: 100073408 மற்றும் 100077864
• Seasonale – DIN 02296659, காலாவதி 01/2027, லாட் எண்: 100076607 இந்த மாத்திரைகள் 91 நாட்கள் பயன்பாட்டுக்கான தொகுப்பாக விற்கப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுப்பிலும் மூன்று பிளிஸ்டர் அட்டைகள் உள்ளன. மொத்தம் 84 செயலில் உள்ள (active) மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம் பயனாளர்கள் மாதந்தோறும் அல்லாமல் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே மாதவிடாய் அனுபவிக்கின்றனர்.
கடைசி ஏழு நாட்களில் (மஞ்சள் அல்லது வெள்ளை நிற) செயலில் இல்லாத மாத்திரைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மாத்திரை பெட்டிகளில் முழு பிளிஸ்டர் அட்டை அல்லது தனிப்பட்ட மாத்திரைகள் காணாமல் போயிருந்தால், உடனடியாக மருந்தகத்துக்கு சென்று மாற்று தொகுப்பு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாத்திரையையாவது தவறவிட்டால், வேண்டாத கர்ப்பம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகள் தினமும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை என்பதால், “எந்த அளவிலும் ஒரு டோஸையும் தவிர்க்கக் கூடாது அல்லது மருந்தை நிறுத்தக் கூடாது” என்று அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசரமாக மருந்தகம் செல்ல முடியாவிட்டால், பாக்கேஜில் குறிப்பிட்டுள்ள அடுத்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த மாத்திரைகள் காணவில்லை என்பதனைப் பொறுத்து எவ்வாறு தொடர வேண்டும் என்ற வழிமுறைகள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன.