கொழும்பில் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணாவின் கூற்றுப்படி, பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
வைத்தியசாலைகளில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், அண்மைய வரலாற்றில் கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இதுவாகும்.