கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அமெரிக்கா விஜயம்
கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே புதன்கிழமை இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் சுதந்திர வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை பொய்லீவ்ரே வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

"தற்போதைய வர்த்தகத் தகராறில் கனடாவின் மிகப்பெரிய பலம் அமெரிக்க மக்களின் நன்மதிப்பாகும். சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் கனடா மக்களின் பணத்தையும் வேலைவாய்ப்புகளையும் நாம் பாதுகாக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் புதிய பதிலடி வர்த்தக வரிகள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தயாரிப்புகளுக்குத் தடை விதித்தும், புதிய வரிகளை விதித்தும் நிறைவேற்று உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இந்த விஜயம் கனடா பிரதமர் அலுவலகத்தின் (PMO) ஆதரவுடனே மேற்கொள்ளப்படுகிறது. பொய்லீவ்ரே முன்னதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த போதிலும், பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலை ஏற்று தனது பயணத்தை ஒத்திவைத்திருந்தார்.
9/11 நினைவேந்தல் நிகழ்வில் தாக்குதலுக்குப் பிறகு கனடாவும் அமெரிக்காவும் இணைந்து ஆற்றிய பங்களிப்புகளை அவர் சுட்டிக்காட்டவுள்ளார்.
மேலும், அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, பியர் பொய்லீவ்ரே இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்து மிச்சிகன், டெக்சாஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.