அமெரிக்கா செல்லும் கனடிய எதிர்க்கட்சித் தலைவர்!
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
வாஷிங்டன் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கனடாவால் கட்டுப்படுத்த முடியாது, பேச்சுவார்த்தைகளை நான் அரசிடமே விட்டுவிடுகிறேன். ஆனால், அமெரிக்க மக்களுடனான நமது நல்லுறவையும் பொதுவான நலன்களையும் நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொய்லிவ்ரே தனது சமூக வலைதள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இம்முறை அவரது பயணத் திட்டத்தில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி. இடம்பெறவில்லை. ஒரு நேரத்தில் ஒரு பிரதமர் மட்டுமே நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதால், தற்போதைய அரசு இருக்கும்போது தாம் அங்கு சென்று அரசியல் தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இது கடந்த வாரம் அவர் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்குச் சென்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இரண்டாவது சர்வதேசப் பயணமாகும்.