கனடிய ஆளும் கட்சி மீதான பாரதூர குற்றச்சாட்டு
கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெர்னான்-லேக் கன்ட்ரி-மோனாஷி தொகுதி கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினரான ஸ்காட் ஆண்டர்சன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் அரசுக்கு பெரும்பான்மை அந்தஸ்து கொடுக்கும் வகையில் தம்மை கட்சித் தாவுமாறு அணுகப்பட்டதாகவும், ஆனால் தனது வாக்களர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என தாம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆண்டர்சன், லிபரல்கள் கன்சர்வேடிவ் உறுப்பினர்களை இழுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்து, கடந்த நவம்பரில் கிறிஸ் டி'என்ட்ரெமான்ட் மற்றும் டிசம்பரில் மைக்கேல் மா ஆகிய இரு கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் அரசாங்க பக்கம் தாவியதன் பின்னணியில் வெளியாகியுள்ளது.
ஆளும் லிபரல்கள் தேசிய கட்டமைப்பு திட்டங்கள் குறித்து வெற்று வாக்குறுதிகளை அளித்து, வரிகளை உயர்த்தி, பில்லியன் கணக்கில் செலவழித்து தமது அதிகாரத்தை நிலைநாட்ட முயல்வதாகவும், கன்சர்வேடிவ்கள் கட்சி மாற இலஞ்சம் வழங்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.