அல்பர்டா பிரிவினை வாக்கெடுப்பை முன்னிட்டு கனடாவை ஒன்றுபடுத்தும் பிரசாரம்
கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
அதன்படி, அல்பர்டா தொடர்பான வாக்கெடுப்பு பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் "Referendum Lead for Alberta" என்ற புதிய பொறுப்புக்கு பார்க்லாண்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேன் லொய்டை, அவர் நியமித்துள்ளார்.
ஒன்றுபட்ட கனடாவுக்குள் வலிமையான அல்பர்டாவை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை டேன் லொய்ட் முன்னெடுக்க வேண்டுமென பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
அல்பர்டா மக்களின் கருத்துகளையும் கவலைகளையும் நேரடியாகக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நம்பிக்கையூட்டும் தீர்வுகளை முன்வைத்து, கனடாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் பணியில் டேன் லொய்ட், அல்பர்டா கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்பர்டா மக்களின் அதிருப்திக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறிய பொய்லிவ்ரே, வீடு வாங்க முடியாத நிலை, வாழ்க்கைச் செலவின் உயர்வு, குடும்பத்தை நடத்தும் சிரமம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் கனடாவின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், லிபரல் அரசின் கொள்கைகள் அல்பர்டாவின் எரிசக்தித் துறையை பாதித்ததுடன், முக்கிய எண்ணெய் குழாய் திட்டங்களையும் தடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
"அல்பர்டா மக்களை கண்டிப்பது எங்கள் நோக்கமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதே எங்கள் கடமை" என பொய்லிவ்ரே வலியுறுத்தினார்.
அல்பர்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து கட்டாய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்ற கேள்வி தொடர்பாக, வரும் அக்டோபர் மாதம் மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்னரும், அல்பர்டாவில் பிரிவினை ஆதரவை எதிர்த்து கோடை காலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதாக பொய்லிவ்ரே அறிவித்திருந்தார்.