பெல்ஜியத்தில் 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு பிளெமிஷ் நகரமான டென்டர்மொண்டே பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அப்போது, வடிகால் குழாய் அமைப்பதற்காகத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்செயலாகப் பெருமளவிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களைக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறை, சுமார் 50 தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை மீட்டு, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களாகப் பகிர்ந்தனர். சிஏடபிள்யூ ஈஸ்ட்-ப்ளாண்டர்ஸ் என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் அடித்தளச் சுவரில் சுமார் 10.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளும் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
ஆரம்பத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக இருந்தது. கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின் போதுதான் இதைக் கண்டெடுத்தோம்; நிச்சயமாகத் தங்கம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கோபி என்ற கட்டுமானத் தொழிலாளி க் கூறியுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் விரைவாகப் கணக்கெடுக்கப்பட்டு, பெல்ஜியம் அரசாங்கத்திற்குச் சொந்தமான உயர்பாதுகாப்பு பெட்டகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரப் படத்தை (Profile picture) தங்க நாணயத்தின் படமாக மாற்றிய காவல்துறை, "இந்தப் பகுதிக்கு மீண்டும் வருகை தரப் பல புதையல் வேட்டைக்காரர்கள் விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஒரு 'தங்கமான அறிவுரை': இங்கு வருவது முற்றிலும் வீண் முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேலி அமைக்கப்பட்டுள்ள அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இந்தத் தங்கப் புதையல் சட்டப்பூர்வமாக யாருக்குச் சொந்தமானது, இதை யார் வைத்துக்கொள்வார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "இந்தச் செல்வம் சரியான நபர்களின் கரங்களைச் சென்றடையும் என நம்புவோம்" என்றும் காவல்துறை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.