டிராகன் பழ இறக்குமதியை தடுத்த கொரோனா!
கொரோனா பாதிப்பு காணப்பட்டதன் எதிரொலியாக வியட்னாம் நாட்டில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதிக்கு சீனா 4 வார தடை விதித்து உள்ள நிலையில் அதன் எல்லையில் சுமார் 3,838 டிரக்குகள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவுக்கு வியட்னாம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வியட்னாம் விவசாய விளைபொருட்களை சீனா இறக்குமதி செய்திருந்தது.
அவற்றில் டிராகன் பழங்கள், பலாப்பழங்கள் ஆகியவையும் அடங்கும். இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந்தேதியில் இருந்து டிசம்பர் 27 ஆம் திகதி வரையிலான இறக்குமதியில், டிராகன் பழங்களில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது.
இதனையடுத்து , வியட்னாம் நாட்டில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதிக்கு சீனா 4 வார தடை விதித்து உள்ளது. இந்த தடை , வருகிற ஜனவரி 26 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
இதனால் 400 கன்டெய்னர் லாரிகள் எல்லையில் இருந்து திரும்பி வந்ததுடன், அதிலிருந்த டிராகன் பழங்கள் 30 சதவீத நஷ்டத்துடன் வியட்னாமிலேயே விற்கப்பட உள்ளன.
அதேவேளை இதேபோன்று விளைபொருட்கள் அடங்கிய 3,383 டிரக்குகள் (லாரிகள்) சீன எல்லையையொட்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.