கனடா அரசாங்கத்தை வலியுறுத்தும் அமெரிக்கா!
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் லொறி சாரதிகளின் போராட்டத்தை கனடா அரசாங்கம் விரைவில் ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக லொறி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் க்னடா தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் டெட்ராய்ட் மற்றும் கனடாவின் விண்ட்சர் நகரங்களை இணைக்கும் தூதர் பாலத்தை கடந்த 2 வாரமாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இருப்பதால் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்து வரும் லாரி டிரைவர்களின் போராட்டத்தை கனடா அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை மந்திரிகள் கனடா மந்திரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க கனடா அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், இதற்கு அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகங்கள் முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.