கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை! அடித்து கூறும் அதிபர்
மர்மத்தின் மறுபெயராய் இருக்கும் வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையே அதிபர் தான் தீர்மானிக்கிறார்.
அத்தகைய வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ஜூன் 4-10 தேதிகளில் 733 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதாக WHO செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அவர்களில் 149 பேருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்று இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அங்கே கடுமையான பஞ்சம் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தொற்று பாதிப்பு இல்லவே இல்லை என கூறுகிறார்.
ஜூன் 10 ஆம் தேதி வரை 30,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனத்திடம் வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் உள்ள மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் நெருங்கிய நட்பு நாடான சீனா வட கொரியாவின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில் ஒரு பாதிப்பு கூட இல்லை என்று வல்லுநர்கள் பரவலாக சந்தேகிக்கின்றனர்.
அதன் வைரஸ் தடுப்பு முயற்சிகளை "தேசிய அளவில் வாழ்வாதாரத்திற்கான அம்சம்ம்" என்று வர்ணிக்கும் வட கொரியா, சுற்றுலாப் பயணிகளைத் தடைசெய்தது, அந்நாட்டில் உள்ள ராஜீய அதிகாரிகளையும் வெளியேற்றியது. மேலும் எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை கடுமையாக தடைசெய்தது.
லாக்டவுன் விதிக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே பல தசாப்தங்களாக நொறுங்கிய பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடையும் வடகொரியாவை மிகவும் பாதித்துள்ளது.
வட கொரியாவில் கடந்த வாரம் நடந்த ஒரு அரசியல் மாநாட்டின் போது, அதிபர் கிம் ஜாங் உன், நீண்டகால COVID-19 கட்டுப்பாடுகளுக்கு அதிகாரிகள் தயாராக இருக்குமாறு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக நாடு தனது எல்லைகளைத் திறக்கத் தயாராக இல்லை என்பதை இது குறிக்கிறது.