கருணைக்கொலைக்கு அங்கீகாரம் வழங்கிய நாடு!
ஆஸ்திரியாவில் கருணைக் கொலை அனுமதிக்கும் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி தீவிர நோய்வாய்ப்பட்ட அல்லது நிரந்தர பலவீனமான நிலையில் உள்ள வயோதிபர்களை அவர்களது விருப்பின் பேரின் கருணைக் கொலை செய்ய இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இறுக்கமான நடைமுறைகளின் கீழ் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும். உயிரை மாய்த்துக்கொள்ள செய்யப்படும் விண்ணப்பங்கள் இரண்டு மருத்துவர்களால் மதிப்பிடப்படும். அந்த இரு மருத்துவர்களில் ஒருவர் நோய் தடுப்பு மருந்து நிபுணராக இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புள்ள ஒருவர் தன்னை கருணைக்கொலை செய்ய விண்ணப்பம் செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அவருக்கான குணமாக்கல் கிசிக்கைகளுக்கான நிதி உதவிகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த புதிய விதிகள் மூலம் சிறார்களோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் ஒருவர் மீள முடியாத நோய் நிலையால் அவதிப்படுபவர் என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அவா்களால் சுயமாக முடிவெடுக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு மருத்துவர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் தங்கள் முடிவு குறித்து சிந்திக்க நோயாளிகளுக்கு 12 வாரங்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்த காத்திருப்பு காலத்திற்குப் பிறகும் அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் உரிய மருந்துகளுடன் கருணைக்கொலை செய்ய முடியும்.
இதேவேளை துஷ்பிரயோகத்தை தடுக்க இந்த மருந்துகளை விற்கும் மருந்தகங்களின் பெயர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் என்றும், அவை பொதுவில் விளம்பரப்படுத்தப்படாது எனவும் ஆஸ்திரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.