புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் தாயும் உயிரிழப்பு
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்பட்ட 23 வயதுடைய குழந்தையின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
ஆனால் அவருடன் புதிதாகப் பிறந்த குழந்தை இல்லாததால், காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுக்கள் விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இரண்டு நாட்கள் நீடித்த தேடுதலின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நோவா ஸ்கோஷியாவின் குட்வுட் பகுதியில் உள்ள ஓல்ட் கோச் சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் குழந்தையின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் புதன்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்த வழக்கு ஏற்கனவே மிகவும் சிக்கலானதாக இருந்தது. தற்போது தாயாரின் மரணம் விசாரணையை மேலும் சவாலானதாக மாற்றியுள்ளது, என ஹாலிஃபாக்ஸ் காவல்துறையின் அதிகாரி மார்டின் கிரோம்வெல் தெரிவித்தார்.
காவல்துறையினர், தாய் உயிரிழப்பதற்கு முன்பு அவரிடம் எந்தவிதமான வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தாயின் மரணத்திற்கான காரணத்தை நோவா ஸ்கோஷியா மருத்துவ பரிசோதகர் சேவை விசாரித்து வருகிறது. அதேபோல், குழந்தையின் மரணத்திற்கான காரணமும் தனியாக ஆய்வு செய்யப்படுகிறது.
ஆரம்பகட்ட உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ள போதிலும், அவை தொடர்பான விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.
இந்த வழக்கில் 23 வயதுடைய சுக்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவி 26 வயதுடைய ரமன்தீப் கௌர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.