நுவரெலியாவில் வீடொன்றில் தம்பதி சடலமாக மீட்பு
நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ வாயுவைச் சுவாசித்தமையால் இன்று அதிகாலை இந்த தம்பதி உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இத்தம்பதியினர், குறித்த விடுதிக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்துள்ளனர்.

அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக, இந்த தம்பதி பார்பிகியூ அடுப்பை பற்றவைத்துள்ளனர். அதனை அறைக்குள் வைத்துக்கொண்டு தம்பதியினர் உறங்கச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை உறவினர்கள் அவர்களது தொலைபேசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், எவ்வித பதிலும் கிடைக்காததால், இது குறித்து அந்த பகுதியின் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோதே தம்பதியினர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஆண் 52 வயதுடைய கப்பல் கேப்டன் எனவும், அவரது மனைவி 46 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.