கனடா எல்லையில் இந்தியக் குடும்பம் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளின் கோரிக்கை நிராகரிப்பு
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்தது ஒரு இந்தியக் குடும்பம்.
2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியர்களான ஜனதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி பென் (37), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (11) மற்றும் தர்மிக் (3) ஆகியோர், கனடாவின் மனித்தோபாவுக்கும் அமெரிக்காவின் மின்னசோட்டாவுக்கும் இடையில் அமைந்துள்ள எல்லை வழியாக, நடந்தே கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளார்கள்.
ஆனால், பனியில் உறைந்து அவர்கள் நான்குபேரும் உயிரிழந்துவிட்டார்கள். ஆளுக்கொரு இடத்தில் அவர்கள் நால்வரும் உயிரிழந்து கிடந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை உருவாக்கின.
இந்த சம்பவம் தொடர்பில், இந்தியக் குடிமகனான ஹர்ஷ்குமார் பட்டேல் என்பவரும், ப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவுசெய்தது. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து, மீண்டும் புதிதாக விசாரணை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களுடைய கோரிக்கையை அமெரிக்க ஃபெடரல் நீதிபதியான John Tunheim நிராகரித்துவிட்டார்.
ஹர்ஷ்குமார் பட்டேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்ட் ஆகிய இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.
ஏற்கனவே மே மாதம் 7ஆம் திகதி இந்த வழக்கில் அவர் தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.