செயற்கை நுண்ணறிவை நீதிபதிகள் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
கனடாவின் கியூபெக் மாகாண நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஆக்கபூர்வ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
நீதி வழங்குவது என்பது விவாதம், மனித கண்ணியம், சமூகச் சூழல் மற்றும் தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் மனிதர்களின் பொறுப்பு என்றும், சுய அறிவோ மனசாட்சியோ இல்லாத AI தொழில்நுட்பத்தால் அதனை ஈடுசெய்ய முடியாது என்றும் நீதிமன்றங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் கியூபெக் நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பில், நடைமுறையிலேயே இல்லாத சில பழைய வழக்குகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்ததை அடுத்து, தீர்ப்பு வழங்குவதில் AI பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்ததன் தொடர்ச்சியாகவே இந்த அவசரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நீதிபதிகள் தாங்கள் ஏற்கனவே எழுதிய உரைகளைத் திருத்துதல், மொழிபெயர்த்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே AI-ஐப் பயன்படுத்தலாம்; மாறாக, வழக்கின் சட்டப்பூர்வ முடிவுகளைத் தீர்மானித்தல், சாட்சியங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வரைவு செய்தல் போன்ற பணிகளுக்கு அதனைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதற்கு தொழில்நுட்பத்தின் மீது பழிபோட முடியாது என்றும், தீர்ப்பின் முழுமைக்கும் நீதிபதியே முழுப் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளதுடன், ரகசியத் தகவல்களை AI செயலிகளில் உள்ளிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயன்பாட்டில் சந்தேகம் ஏற்படும் நேரங்களில் AI-ஐப் பயன்படுத்துவதைக் கைவிடுவதே சிறந்தது என்றும் இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.