அமெரிக்காவுக்குள்ளிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற 16 பேர்: ஒருவர் பலி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள Coutts என்னும் ஆல்பர்ட்டா மாகாண கிராமம் வழியாக, அமெரிக்காவுக்குள்ளிருந்து கனடாவுக்குள் ஒருவர் வாகனம் ஒன்றில் நுழைவதை கனேடிய பொலிசார் கவனித்துள்ளார்கள்.
அவர் தனது வாகனத்தில் தப்பியோட முயற்சிக்க, அவரது வாகனத்தின் டயர்களை பஞ்சர் செய்துள்ளார்கள் பொலிசார்.
உடனே அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார். பொலிசார் அவரைத் துரத்த, அவர் தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திங்கட்கிழமையன்று நான்கு பெரியவர்களும், ஐந்து சிறுவர்களும் அதே Coutts கிராமம் வழியாக கனடாவுக்குள் நுழைய முயல, கனேடிய பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கடந்த மாதம் 14ஆம் திகதி, மனித்தோபாவிலுள்ள Emerson என்னுமிடத்தில் அமைந்துள்ள எல்லை வழியாக ஆறு பேர் கனடாவுக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்களையும் சேர்த்து தாங்கள் மொத்தம் 15 பேரை கைது செய்துள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.