கனடாவில் வீணாகும் எக்கச்சக்கமான கொரோனா தடுப்பூசி
கனடாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டபோது, ஆரம்ப நாட்களில் போதுமான தடுப்பூசி கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆனால், இப்போது பெரும்பான்மை கனேடியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுவிட்ட நிலையில், மருத்துவ துறையினருக்கு ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆம், இப்போது நிறைய தடுப்பு மருந்து கைவசம் இருக்கிறது, ஆனால், ஊசி போட்டுக்கொள்ள போதுமான ஆட்கள் வருவதில்லை. ஆக, மருந்து காலாவதியாகும் முன் மக்களைக் கண்டுபிடித்து அந்த தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிப்பது மருத்துவ துறையிலுள்ளவர்களுக்கு பெரிய சவாலாகியுள்ளதாம்.
கடந்த இரண்டு மாதங்களில், கனடாவுக்கு பல மில்லியன் டோஸ்கள் மொடெர்னா தடுப்பு மருந்து அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. ஆனால், அவை காலாவதியாகும் முன் அவற்றையெல்லாம் செலுத்தமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஒன்ராறியோ மருந்தக ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்த வார இறுதியில் தங்களிடமிருக்கும் ஆயிரக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்து காலாவதியாக உள்ள நிலைமையில், அவற்றை தூர எறியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வேறு நாடுகளுக்கு வழங்கலாம் என்றால், அதற்குள் மருந்து காலாவதியாகிவிடும், மூன்றாவது டோஸ் வழங்கலாம் என்றால், இதுவரை அது குறித்து சரியான முடிவு எடுக்கப்படவில்லை. ஆக, வீணாக இருக்கும் தடுப்பு மருந்தை என்ன செய்வது என தெரியாமல் அது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறது கனடா.