கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்: ஆண்டும் மாதமும் வெளியிட்ட WHO
ஒவ்வொரு நாடும் மக்கள் தொகையில் 70% வரையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கொரோனா பெருந்தொற்று முற்றாக முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதனால் 2022 ஜூலை மாதத்திற்குள் உலகின் ஒவ்வொரு நாடும் 70% வரையில் தங்கள் மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இலக்கை எட்டிவிட்டால், உலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
ஜூலை தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாட்டிலும் 70 சதவீத தடுப்பூசி என்பதை இலக்காகக் கொண்ட பிரச்சாரத்தில் அரசாங்கங்கள், தொழில்துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
2022 உடன் இந்த பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டுவிடுவோம் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், புதிய வலுவான சுகாதார பாதுகாப்பு கொண்ட சமூகமாகவும் மாற அது பாதை வகுக்கும் என்றார்.
கொரோனா பரவல் தொடர்பில் முதன்முதலாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் Tedros Adhanom குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
2018 டிசம்பர் மாதத்தில் வூஹான் நகரில் 27 பேர்களுக்கு புதிய நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புக்கு சீனா தெரியப்படுத்தியது. அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று என அடையாளப்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிரைக் காவுகொண்டது.
தற்போது அதன் புதிய மாறுபாடு ஓமிக்ரான் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், அச்சுறுத்தியும் வருகிறது. கனடாவை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகையில் 76% பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் முதற்கட்ட தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் முழுமையடையவில்லை என்றே உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.