கனடியர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடியர்கள் தங்களது டிஜிட்டல் கணக்குகளில் வலுவான, சிக்கலான கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டிலும் பல கனடியர்கள் “123456” மற்றும் “password” போன்ற எளிய கடவுச்சொற்களையே பயன்படுத்தி வருவதாக ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களில் “qwerty”, “111111” மற்றும் “qwerty123” என்பனவும் இடம்பிடித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலர் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு கணக்குகளுக்கான கடவுச்சொற்களில் வலுவானவை பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.
எனினும், பிற இணைய சேவைகளுக்கான கணக்குகளில் பழைய எளிய கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
“ஒவ்வொரு கணக்கிற்கும் நீளமான, வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள். அவற்றை மீண்டும் பயன்படுத்தவேண்டாம்,” என சைபர் பாதுகாப்பு நிபுணரான ஜேன் ஆர்னெட் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஹேக்கிங் சம்பவங்களில் நீங்கள் பயன்படுத்திய கடவுச்சொற்கள் தற்போது குற்றவாளிகளிடம் இருக்கக் கூடிய சாத்தியம் உண்டு என சுட்டிக்காட்டியுள்ளார்.
“நீங்கள் பழைய கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவை முறியடிக்கப்படும் என்பதைக் கருதவேண்டும். அதனால் விரைவில் மாற்றுவது சிறந்தது,” என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதுவரை, $168 மில்லியன் டாலர்கள் பெறுமதியான மோசடிகளில் டொரண்டோவாசிகள் இழந்துள்ளனர் எனவும் இதில் பெரும்பாலானது அடையாள திருட்டு வழியாக தொடங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
“அடையாள திருட்டே அனைத்து மோசடிகளின் ஆதாரமா இருக்கிறது. அது எப்போது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது தெரியாததால், அதன் சேதத்தையும் கணக்கிட முடியாது,” சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.