பிரபல ஹாலிவுட் நடிகர் நேதன் சேஸிங் ஹார்ஸிற்கு ஆயுள் தண்டனை
ஹாலிவுட் படமான 'டான்சஸ் வித் வுல்வ்ஸ்' (Dances With Wolves) திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் நேதன் சேஸிங் ஹார்ஸ் (Nathan Chasing Horse), பழங்குடியினப் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.
49 வயதான இவருக்கு நெவாடா நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. லக்கோட்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், திரைப்படப் புகழுக்குப் பிறகு தன்னை ஒரு ஆன்மிகத் தலைவராகவும், மருத்துவக் குணமிக்கவராகவும் (Medicine Man) அடையாளப்படுத்திக் கொண்டார்.
இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக பல பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக, 14 வயது சிறுமி ஒருவரிடம், அவரது தாயின் புற்றுநோயைக் குணப்படுத்த 'ஆவிகள்' இதைக் கோருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால் தாயின் உயிர் போய்விடும் என மிரட்டியும் வந்துள்ளார்.
விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை நேதன் மறுத்ததோடு, இது "நீதிக்குப் புறம்பான செயல்" என்றும் வாதிட்டார்.
இருப்பினும், ஆதாரங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி ஜெசிகா பீட்டர்சன், "பெண்களின் நம்பிக்கையையும் ஆன்மிகத்தையும் உங்களது சுய இன்பத்திற்காக நீங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்" என்று கூறி ஆயுள் தண்டனையை அறிவித்தார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் நீதிமன்றத்திலிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றனர். தற்போது அமெரிக்காவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா மாகாணங்களிலும் இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் 37 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகே இவரால் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகத் தலைவராக மதிக்கப்பட்ட ஒரு கலைஞர், புனிதமான பாரம்பரியங்களைத் துஷ்பிரயோகம் செய்து சிறைக்குச் சென்றிருப்பது ஹாலிவுட் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.