கனடாவில் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் உயர்வு
கனடாவில் சளிக் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதை அரசின் அண்மைய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமீபத்திய வாரங்களில் இருமல், காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளுடன் மருத்துவமனையை அணுகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கனடா சுவாச வைரஸ் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை விகிதம் 3.8% அதிகரித்துள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு 3.7% உயர்ந்துள்ளது. பொதுமக்களிடையே இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் 1.5% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பாதிப்பு 0.2% என்ற அளவில் வழக்கம் போல் கட்டுக்குள் உள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ்களில் 'என்டரோவைரஸ்' மற்றும் 'ரைனோவைரஸ்' ஆகியவையே அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.
இவை மேல் சுவாசக் குழாய் அழற்சி மற்றும் குடல் சார்ந்த அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடிய சாதாரண வைரஸ் தொற்றுகளாகும். ஆய்வகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட 52 சுவாச வைரஸ் பரவல்களில் பெரும்பான்மையானவை (67.31%) கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ளன.
கோவிட்-19 பாதிப்பில் 63% பேரும், இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பில் 55% பேரும் முதியோர்களே. RSV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (52%) சிறு குழந்தைகளாவார்கள்.
ஆயினும், நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் இன்னும் "மிகக் குறைந்த அளவிலேயே" உள்ளது என்றும், இது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.