போருக்கு மத்தியிலும் கொடூரம்; ஈரானில் இருவருக்கு மரணதண்டனை
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப் 05) மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
"கிளர்ச்சியாளர்கள்" எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் இதே வழக்கின் கீழ் 18 வயதான அமீர்ஹொசைன் ஹதாமி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தண்டனைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலவந்தமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மேலும் 11 நபர்களுக்கு எந்த நேரத்திலும் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தற்போதைய சூழல்அமெரிக்காவுடனான போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அடக்குமுறையாகக் கருதப்படுகிறது.