பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ரஷ்யா தலைவர்கள் இடையே இடம்பெறவுள்ள உரையாடல்!
உக்ரைன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe biden) மற்றும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோர் இன்று தொலைபேசியில்உரையாடவுள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இந்த மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது பேச்சு இதுவாகும். இந்நிலையில் இரண்டு தலைவர்களும் உக்ரைன் பாதுகாப்பு விவகாரம் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சூழல் குறித்து பேசுவார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ரஷ்யாவின் எல்லையொட்டி அமைந்துள்ளது.
சுமாா் 30 வீதத்தினர் அங்கு ரஷ்ய மொழி பேசுவோராக உள்ளனர். இந்நிலையில் தனது நாட்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பது தனது பாதுகாப்புக்கு ஆபத்து என ரஷ்யா கருதுகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் ஜனாதிபதி விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் யானுகோவிச் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். தொடா்ந்து ஐரோப்பிய ஆதரவாளர்களால் புதிய அரசு அமைக்கப்பட்டது.
அந்த அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா். ரஷ்ய இராணுவ உதவியுடன் அவர்கள் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா். இதன்போது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷ்யா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இவ்வாறான நிலையில், உக்ரைன் எல்லை அருகே ஏராளமான படையினரை ரஷ்யா குவித்து வருகிறது. ரக்ஷ்யாவின் இந்த நகர்வு உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை முழுமையாக தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக 1.75 இலட்சம் படையினரை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கெனவே 1 இலட்சம் ரஷ்ய படையினா் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்ற நிலையில் அதனை ரஷ்யா மறுத்து வருகிறது.
அத்துடன் பயிற்சிகளுக்காகவே தனது படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தி உள்ளதாகவும் தமது சொந்த மண்ணில் தமது படைகளை சுதந்திரமாக நகர்த்துவதற்கு ரஷ்யாவுக்கு உரிமை இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ( Joe biden) விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையேயான மற்றொரு தொலைபேசி உரையாடல் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.