அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய துணை ராணுவம்: வெளிநாடொன்றில் சம்பவம்
சூடானில் அமெரிக்க தூதர அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக வாகனங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலின் பின்னால் RSF துணை ராணுவம் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும், தூதரக அதிகாரிகள் காயமின்றி தப்பியதாகவே அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் Khartoum பகுதியில் வைத்தே அமெரிக்க தூதரக அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சூடானில் ராணுவத்திற்கும் RSF துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 185 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,800 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மருத்துவர்கள் குழு தெரிவிக்கையில், அப்பாவி பொதுமக்கள் 144 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,400 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனவும் Khartoum பகுதியில் மோதலின் காரணமாக உடல்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும், இரு தரப்பினரும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். இரு தரப்பினரையும் மோதலை கைவிடுபடி மூத்த தூதரக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி மோதலில் ஈடுபட்டுவரும் இரு தளபதிகளையும் திங்களன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.