இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
இஸ்ரேலில் கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது.
பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும். மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளூரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.