கனடாவின் இந்த பகுதிக்கு பயணிக்கவேண்டாம்... அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Central Okanagan மாவட்டத்துக்கு பயணிக்கும் திட்டம் இருந்தால், அதை தவிர்க்குமாறு அல்லது தள்ளிவைக்குமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அதிகாரிகள், Central Okanagan பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளனர்.
மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமாக டெல்டா வகை கொரோனா வைரஸ் உள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு விடுதிகள் மூடப்பட உள்ளன, உணவகங்களில் உணவருந்துவோரின் எண்ணிக்கையும், நிகழ்ச்சிகளுக்காக கூடுவோரின் எண்ணிக்கையும், மறு அறிவிப்பு வரும்வரை குறைக்கப்பட உள்ளன.
வெள்ளி முதல் இரவு விடுதிகள் மூடப்படுகின்றன, உணவகங்களில் மதுபானம் வழங்கும் நேரம் 10 மணியுடன் முடிவடைகிறது. திங்கட்கிழமை முதல், கட்டிடங்களுக்குள்ளும் வெளியிடங்களிலும் கூடும் மக்களுடைய எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட உள்ளது.
Central Okanagan பகுதிக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளோர், தங்கள் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தடுப்பூசி பெறாதோர் அந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக அளவில் கொரோனா பரவல் காணப்பட்டுள்ளது Central Okanaganதான் என்பதால் இந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Central Okanaganஇல் 300 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த வாரத்தில் 1,200 ஆக, அதாவது மூன்று மடங்கு அதிகரித்தது. தொற்றுக்கு ஆளானவர்களில் 80 சதவிகிதம் பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெறாத 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.