பாகிஸ்தானாக மாறுகிறதா அமெரிக்கா? ட்ரம்ப் கட்சி எம்.பிக்கு வந்த சந்தேகம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ், முஸ்லிம் பகுதியாக மாறி வருவதாக அமெரிக்காவின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி. பிராண்டன் கில் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: முஸ்லிம் பகுதியாக டல்லாஸ் மாறி வருவது குறித்து அந்தப் பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனா்.

பல தலைமுறைகளாக அவா்கள் வசித்து வந்த பகுதிகளுக்கு அருகே மசூதிகள் கட்டப்படுகின்றன. ஒட்டுமொத்த சமூகமும் மதமாற்றம் செய்யப்படுகிறது. உள்ளூரில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்றால் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் போன்று இல்லை, பாகிஸ்தானில் இருப்பது போன்று உணர முடிகிறது என்றாா்.
அவா் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாங்கள் அறிந்த, விரும்பிய அமெரிக்காவை முஸ்லிம் மத மாற்றம் அழித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா். கடந்த 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட கில், அவையின் நீதித் துறை, பட்ஜெட் மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக உள்ளாா்.
‘பிராண்டன் கில் கருத்துகள் பிரிவினைவாதம் கொண்டவை; அவை டெக்சாஸ் மாகாணத்தின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. முஸ்லிம் அமெரிக்கா்களை வெளியேற்றும் முயற்சி இது’ என்று டல்லாஸ் பகுதியின் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த பலா் தெரிவித்துள்ளனா்.