விமானக் கேடட்களின் மேற்பார்வையாளர் மீது கொடூரத் தாக்குதல் –டக் ஃபோர்ட் கடும் கண்டனம்!
ஹாமில்டனில் விமானக் கேடட்களின் மேற்பார்வையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது நீங்கள் செய்யக்கூடிய மிகவும் அருவருப்பான செயலாகும்" என்று அவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் 1 ஆம் திகதி, கனடிய ஆயுதப்படையின் 59 வயதான கென்னத் குன்கெல் என்பவர், கேடட்கள் நினைவூட்டல் பூக்களை விநியோகிப்பதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு சிறுவர்கள் கேடட்களுக்கு அருகே வந்து அவர்களின் காதுகளில் உரத்த சத்தமிடும் 'ஏர் ஹார்ன்' அடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தச் சிறுவர்களைக் கேள்வி கேட்பதற்காக உணவகம் ஒன்றுக்குள் பின்தொடர்ந்து சென்ற குன்கெல் மீது, இந்தச் சம்பவத்துடன் தொடர்பில்லாத 48 வயது பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஒரு சிறுவனும் அவரைப் பலமுறை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் கென்னத் குன்கெல் கடுமையான, வாழ்நாளைப் பாதிக்கும் காயங்களுக்கு உள்ளானார். அவர் தற்போதைக்கு நடக்கும் திறனை இழந்துள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பீட்டர்பரோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் டக் ஃபோர்ட், "குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் பெற்றோர் வெட்கப்பட வேண்டும். நாட்டின் சேவைக்காகப் பணியாற்றும் கேடட்களை மேற்பார்வையிடும் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அருவருப்பானது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சரியாக வளர்க்க வேண்டும், என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 12 வயது சிறுவன் மீது தாக்குதல் குற்றச்சாட்டும், 48 வயது பெண் மீது தீவிரத் தாக்குதல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.