அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி ; ஹவுஸ் அமைப்பின் பணிப்பாளர் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானத்திலிருந்து தப்பியோடி, தற்போது காணாமல் போயுள்ள விமானி தொடர்பான விவகாரம் அமெரிக்காவிற்குப் பெரும் பீதியையும் அரசியல் ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மூலோபாய ஆய்வு நிறுவனமான 'ஹவுஸ்' (House) அமைப்பின் பணிப்பாளர் லோரல் ராப் (Laurel Rapp), சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல் போன விமானி ஈரானியப் படைகளிடம் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது ஈரானுக்குப் போர் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய பலத்தைத் தரும் என அவர் சுட்டிக்காட்டினார்.
போர் வானூர்தி வீழ்த்தப்பட்டு, அதன் விமானி காணாமல் போயுள்ள செய்தியானது அமெரிக்க நிர்வாகத்தின் தற்போதைய நகர்வுகளுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை குறித்த அமெரிக்க விமானி ஈரானால் கைது செய்யப்பட்ட புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது அமெரிக்க மக்கள் மத்தியில் போர் குறித்த எதிர்மறையான கருத்துக்களை வலுப்படுத்தும் என லோரல் ராப் எச்சரித்துள்ளார்.
தற்போது அந்த விமானியை மீட்பது அமெரிக்காவிற்கு மிகத் தீர்மானகரமான மற்றும் சவாலான காரியமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.