திடீரென நுழைந்த ட்ரோன்கள் ; நூழிலையில் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி சென்ற விமானம் ட்ரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெலன்ஸ்கி மால்டோவாவில் இருந்து நார்வேக்கு விமானத்தில் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா தலைநகர் சிசினாவ் விமான நிலையத்தில் இருந்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்படுவதற்கு முன்பு, அந்த நாட்டின் வான்பரப்பில் ட்ரோன் ஒன்று நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மால்டோவா வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஜெலன்ஸ்கியின் விமானம் உள்பட பல விமானங்களின் பயணம் தாமதமானது.
இதுகுறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே கூறுகையில், “மால்டோவாவில் இருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலன்ஸ்கியின் விமானம் டிரோன் ஒன்றால் தாக்கப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்ரோன் விமானத்திற்கு எவ்வளவு அருகில் வந்தது என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
மால்டோவா அதிகாரிகளின் தகவலின்படி, ரஷ்யாவை சேர்ந்ததாக கருதப்படும் 2 டிரோன்கள் அந்த நாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்தன. அதில் ஒரு ட்ரோன் தலைநகர் அருகே உள்ள வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்தது. மற்றொரு டிரோன் ருமேனியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது என குறிப்பிட்டனர்.