கனடிய பிரித்தானிய இரட்டைக் குடியுரிமையாளர்களின் கவனத்திற்கு…
எதிர்வரும் 25ம் திகதி முதல் அமலுக்கு வரும் பிரித்தானியாவின் புதிய நுழைவு விதிகள் காரணமாக, கனடா–பிரித்தானியா இரட்டைக் குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கானோர் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளனர்.
மாண்ட்ரியலில் வசிக்கும் சாரா பய்ரன், 1970களில் கனடாவுக்கு குடிபெயர்ந்த பிரித்தானியாவில் பிறந்தவர். அவர் வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை இங்கிலாந்துக்குப் பயணம் செய்வது வழக்கம்.
ஆனால் தனது பிரித்தானிய கடவுச்சீட்டை காலாவதியாக விட்டிருந்ததால், புதிய விதிப்படி இனி கனடிய கடவுச்சீட்டுடன் மட்டும் பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் பலர் இதை அறியாமல் விமான நிலையத்தில் சிக்கிக்கொள்ளப் போகிறார்கள் என அவர் கவலை தெரிவித்தார்.
புதிய விதிப்படி, பிரித்தானியா–கனடா இரட்டைக் குடியுரிமையாளர்கள் ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும்போது கட்டாயமாக பிரித்தானிய அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டை பயன்படுத்த வேண்டும்.
இது கடந்த ஆண்டு அறிமுகமான மின்னணு பயண அனுமதி முறைமையின் தொடர்ச்சியாக அமல்படுத்தப்படுகிறது.
பிரித்தானியாவில் பிறந்தவர்கள் மட்டுமன்றி, அவர்களது குழந்தைகளும் சில சூழ்நிலைகளில் தானாகவே பிரித்தானிய குடியுரிமை பெற்றிருக்கலாம். எனவே பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
கனடாவில் வசிக்கும் 4.6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவில் பிறந்தவர்கள் என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய விதி அமலுக்கு வந்ததும், செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டோ அல்லது “Certificate of Entitlement” எனப்படும் குடியுரிமை சான்றிதழோ இல்லாவிட்டால், நுழைவு மறுக்கப்படலாம். இந்த சான்றிதழைப் பெறுவதற்கான செலவு 800 முதல் 1,000 டாலருக்கும் அதிகமாக இருக்கலாம்.
இல்லையெனில் குடியுரிமையை ரத்து செய்வதுதான் மற்றொரு தெரிவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாற்றம் எல்லைப் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என கனடாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரொப் ரின்லைன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியரும் கனடியரும் எங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் எல்லை முறைமையை நவீனப்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.