டுபாயில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தனிப்பட்ட தொடர்புக்கு தடை
டுபாயில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பணியாளர்கள் தங்களது தனிப்பட்ட தொலைபேசிகள், தொடர்பு இலக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடாக மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டுபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு அதிகாரசபை (KHDA) அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகள், அங்குள்ள தனியார் பாலர் பாடசாலைகள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் பொருந்தும்.

இதன்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனப் பணியாளர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்கு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் உத்தியோகபூர்வ தொடர்புத் தளங்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், தங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் அல்லது சமூக வலைத்தளக் கணக்குகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெற்றோருடன் தொடர்புகொள்வதற்காகப் பாடசாலைகளால் நிர்வகிக்கப்படும் WhatsApp குழுக்களுக்கு இந்தத் தடை தானாகவே பொருந்தாது. அவை கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் உரிய கண்காணிப்பிலும் இயங்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் 21 வயது வரையிலான மாணவர்களுக்குப் பொருந்துவதுடன், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விசேட சிறுவர் பாதுகாப்பு நடைமுறைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் நேரடி மற்றும் இணையவழிக் கற்றல் சூழல்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது