வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சவதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 214 அதிர்வுகள்
அதேவேளை கடந்த புதன்கிழமை வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முகங்கொடுத்திருந்தது.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 920 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலநடுக்க இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 243 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களினால் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகரான கராகஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ வசதிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் பின்னர் மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் நோக்கில் தற்போது தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, நிலநடுக்க மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகப் பல சர்வதேச மீட்புப் பணியாளர்களும் வெனிசுலாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், முதலாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 214 அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) பகுதியே அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.