புதிதாக மூன்று கொலை வழக்கை எதிர்கொள்ளும் பிரபல கனேடிய மருத்துவர்
தம்மை நாடி வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் கொலை வழக்கை எதிர்கொள்ளும் ஒன்ராறியோ பிராந்திய மருத்துவர் மீது மேலும் மூன்று கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் 89 வயதான ஆல்பர்ட் பாய்ண்டிங்கரின் மரணம் தொடர்பாக 35 வயதான மருத்துவர் பிரையன் நாட்லர் குற்றம் சாட்டப்பட்டார். சம்பவத்தின் போது நாட்லர் ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார்.
தொடர்புடைய மருத்துவமனையில் பல சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரித்து வருவதாகவும், ஆனால் எத்தனை பேர் என்பதை அவர்கள் வெளியிடவில்லை என்றும் விசாரணை நீளும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் நாட்லர் மீது குற்றம் சாட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், மருத்துவம் செய்ய தடை உட்பட பல நிபந்தனைகளுடன் ஜூலை 2021ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதன்கிழமை மருத்துவர் நாட்லர் கைது செய்யப்பட்டு அவர் மீது முதல் நிலை கொலையில் மூன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று பெண் நோயாளிகள் மரணமடைந்துள்ள விவகாரத்தில் இவரது பங்கு இருப்பதை அறிந்துள்ள நிலையிலேயே கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.