ஈரானுக்கு எதிரான பொருளாதார யுத்தம் ; நாளொன்றுக்கு 500 மில்லியன் டொலர் இழப்பு
அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் நாளொன்றுக்கு 500 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) கூறுகையில், ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் முனையமான கார்க் தீவில் (Kharg Island) இருந்து எண்ணெயை ஏற்றுமதி செய்யவோ அல்லது அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவோ முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடி
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஈரானிய அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு மாதாந்த ஊதியத்தைக்கூட வழங்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒப்பரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற இராணுவ நடவடிக்கையினால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள ஈரானிய ஆட்சிக்கு, ஜனாதிபதி ட்ரம்ப் பெருந்தன்மையுடன் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக லெவிட் தெரிவித்தார். ட்ரம்ப் போர்நிறுத்தக் காலத்தை தற்காலிகமாக நீடித்திருந்தாலும், இராணுவத் தாக்குதல்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால், ஈரானுக்கு எதிரான 'பொருளாதார யுத்தம்' மற்றும் கடற்படை முற்றுகை ஆகியவை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கத்திற்குள் தற்போது இரண்டு குழுக்களிடையே கடும் மோதல் நிலவுவதாக அமெரிக்கா கருதுகிறது.
நாட்டின் தற்போதைய சூழலை உணர்ந்து செயல்படும் நடைமுறைவாதிகள் (Pragmatists) மற்றும் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் கடும்போக்காளர்கள் (Hardliners) ஆகிய இரு தரப்பினரிடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில், அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஈரானிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான பதிலுக்காக ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருப்பதாகவும் கரோலின் லெவிட் மேலும் தெரிவித்தார்.