நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட கனடியர்
2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு கனேடிய பொருளாதார நிபுணர் பீட்டர் ஹவிட் (Peter Howitt), நெதர்லாந்தின் ஜோயல் மோகிர் (Joel Mokyr) மற்றும் பிரெஞ்சு நாட்டு பிலிப் ஆகியோன் (Philippe Aghion) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆஃப் சயின்சஸ் இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்கள் “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது என் வாழ்க்கையின் கனவு நனவான தருணம் என பீட்டர் ஹவிட் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் ஒரு ஸ்வீடன் செய்தியாளர் அவரது மனைவியின் தொலைபேசிக்கு அழைத்து தகவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
படைப்பாற்றல் அழிவு கொள்கை
கமிட்டியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே எனக்குத் தெரிந்துவிட்டது. இன்று முழுவதும் தொலைபேசி அழைப்புகளைப் பதிலளிப்பதில் கழியப்போகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹவிட் மற்றும் ஆகியோன் இருவரும் கணிதப் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரத்தில் முக்கியமான “படைப்பாற்றல் அழிவு” (Creative Destruction) என்ற கொள்கையை விளக்கினர்.
இது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பழையவற்றை மாற்றி பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் செயல்முறையாகும். இந்தக் கொள்கை முதலில் பொருளாதார நிபுணர் ஜோசப் ஷும்பிட்டர் (Joseph Schumpeter) அவர்களின் 1942 ஆம் ஆண்டுக் “Capitalism, Socialism and Democracy” என்ற நூலில் விவரிக்கப்பட்டது.
ஹவிட் கூறுகையில், “நான் 30 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும் ஆகியோனுடன் இந்த வெற்றியை கொண்டாட ஆவலாக உள்ளேன்.
எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஸ்வீடனுக்கு சென்று கொண்டாடப்போகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
79 வயதான ஹவிட், மொன்ட்ரீயல் நகரில் உள்ள மெக் கில் பல்கலைக்கழகம் (McGill University) இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்; பின்னர் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (Western University, Ontario) இல் முதுநிலை பட்டம் முடித்தார்.
தற்போது அவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் (Brown University, Rhode Island) இல் சமூக அறிவியல் பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார்.