எக்வடர் ஜனாதிபதியை சாக்லேட்டில் விசம் கலந்து கொல்ல முயற்சி
எக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா நூதனமான முறையில் படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட சாக்லேட் மற்றும் ஜாம் ஆகியவற்றில் நஞ்சு கலந்த இரசாயனங்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இனிப்பு பொருட்களில் மிகுந்த அளவில் மூன்று வகையான நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இது தற்செயலாக நடந்தது அல்ல என்று உறுதியாக கூறினார்.

இந்த நச்சுப் பொருட்கள் தயாரிப்பிலிருந்தோ அல்லது அதன் பொதியிடலிலிருந்தோ வந்தவை அல்ல. இது திட்டமிட்ட முயற்சி என்று 37 வயதான ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அவரது பாதுகாப்பை கவனிக்கும் இராணுவ பிரிவு இது தொடர்பிலான வழக்கை அரசு வழக்கறிஞரிடம் பதிவு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நோபோவாவின் உயிருக்கு எதிரான இரண்டாவது கொலை முயற்சி குற்றச்சாட்டு ஆகும். சமீபத்தில் நடைபெற்ற பழங்குடியின எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் நாட்டின் அதிகரித்து வரும் குற்றச்செயல்களுக்கிடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இம்மாதம் தொடக்கத்தில், எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டக்காரர்கள் தாக்கியபோது, ஜனாதிபதியின் வாகனத்தில் துப்பாக்கி குண்டு அடையாளங்கள் காணப்பட்டதாக அரசு தெரிவித்தது.
அப்பொழுது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜியான் கார்லோ லொஃப்ரெடோ, இதை “கொலை முயற்சி” என விவரித்தார்.
ஆனால், குண்டுச் சுவடுகள் அல்லது ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை, நோபோவா பாதிப்பின்றி தப்பினார்.
எக்வடாரின் மிகப்பெரிய பழங்குடியின அமைப்பு “கோனாய்”, செப்டம்பர் 22 முதல் தலைநகர் பிச்சின்சா உட்பட பல பகுதிகளில் சாலை மறியல்கள் நடத்தி வருகிறது.
சில அரசியல் விமர்சகர்கள், நோபோவாவின் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக காட்டும் அரசியல் முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.