8 பெண்களுக்கு மரண தண்டனையா? ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் கொடுத்த பதிலடி
ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகாமல், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 2-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்த சூழலில், ஈரானில் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளும் பெண்களை விடுவிக்கும்படி ட்ரம்ப் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை
சமூக ஊடக ஆவர்வலரான இயால் யகோபி வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், ஈரானிலுள்ள 8 பெண்கள் தூக்கு தண்டனையை எதிர்கொள்ள கூடிய சூழலில் உள்ளனர் என தெரிவித்து உள்ளார். அவர்களுடைய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
இதனை தன்னுடைய ட்ரூத் சோசியல் வலைதளத்தில் பகிர்ந்த ட்ரம்ப், என்னுடைய பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள ஈரானின் தலைவர்களே, இந்த பெண்களை விடுவியுங்கள். நான் உங்களை பெரிதும் பாராட்டுவேன்.
நீங்கள் விடுவித்த பின்னர், அந்த உண்மையை அவர்கள் மதிப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த வேண்டாம்.
அது நம்முடைய பேச்சுவார்த்தைக்கு மிக பெரிய தொடக்கம் ஆக அமையும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என பதிவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், ஈரான் நாட்டின் நீதி துறை வெளியிட்ட செய்தியில், ட்ரம்ப் மீண்டும் போலியான செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டு உள்ளார் என தன்னுடைய வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
தூக்கு தண்டனைக்கு ஆளாகியுள்ள பெண்கள் என கூறப்படுபவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு விட்டனர். சிலர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தீர்ப்புகள் அளிக்கப்பட்டால், முடிவில் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்து உள்ளது.