தேர்தலில் வாக்களிக்காத முதியவரை கொடுப்பனவு வழங்காமல் துரத்திய வேட்பாளர் ; தமிழர் பகுதியில் சம்பவம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறச் சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவு தர முடியாதென துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
முதியோர் கொடுப்பனவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பனவு பெறுவதற்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார்.
அவர் தனக்குரிய கொடுப்பனவுக்காக இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த நிலையில், அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் “தாமதிக்காமல் கொடுப்பனவை சீக்கிரம் வழங்கி என்னை அனுப்புங்கள்” என கூறியுள்ளார்.
அதற்கு, அங்கிருந்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபர் ஒருவர் அந்த முதியவரை பார்த்து, தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடிந்துள்ளார்.
பின்னர், அந்த நபர் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்று, இந்த முதியவருக்கு கொடுப்பனவு வழங்க வேண்டாம் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அதன் பின், அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற முதியவரை, தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டியதோடு, முதியவர் வைத்திருந்த கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து, கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த முதியவர் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பாக மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.