பிரிட்டனில் இன்று தேர்தல்; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி? உலக நாடுகள் ஆவல்!
இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
பிரிட்டனின் தற்போதைய பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகின்றார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடியவுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சியே போட்டிப்போடும்.
யார் ஆட்சியை பிடிப்பார்கள்?
கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியே பிரிட்டனை ஆண்டு வருகிறது. ஒரு காலத்தில் தன் செல்வாக்கினால், உலகையே கைக்குள் போட நினைத்த பிரிட்டன், தற்போது பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில்தான் உள்ளது.
அதேசமயம் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளும் தலைத்தூக்கி உள்ளன. இதனால், மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியான கருத்துக்கணிப்புகளின்படி ரிஷி சுனக்குக்கு குறைவான அளவு தொகுதிகளே கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ரிஷி சுனக்குக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது என்று கணிக்கப்படுகிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறது.
ஒருவேளை இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பா முழுவதும் இந்த தேர்தலின் தாக்கம் பிரதிபலிக்கும் என்றும் கூறப்படும் நிலையில் , மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்துதான் உலக நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.