OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை!
எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது.
பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்கட்கிழமையன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார்.
உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது.
எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், “நீங்கள் ஆர்வமாக இருந்தால் டுவிட்டரை $9.74 பில்லியனுக்கு வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும்” கூறி பதிவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு டுவிட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றியமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் OpenAI மீது இரண்டு முறை வழக்குத் தொடுத்த பின்னர் இந்த வாய்ப்பை மஸ்க் முன்மொழிந்தார்.
முதல் முறையாக, 2024 ஜூலையில் நிறுவனம் அதன் ஸ்தாபகக் கொள்கைகளில் இருந்து விலகி, குறிப்பாக வணிகமயமான, இலாபம் சார்ந்த கட்டமைப்பை நோக்கிச் செல்லும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மனிதகுலத்திற்கான பரந்த நன்மைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படும் அபாயத்தில் OpenAI இன் பணியை இந்த மாற்றம் ஏற்படுத்தியதாக மஸ்க் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டப் போராட்டம், திறந்த, இலாப நோக்கமற்ற முயற்சியாக AIக்கான மஸ்கின் பார்வை மற்றும் OpenAI இன் வளர்ச்சி மற்றும் இலாபத்தைப் பின்தொடர்வதற்கு இடையே உள்ள பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆகஸ்ட்டில் மஸ்க் மீண்டும் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்து, “இலாபத்தை அதிகரிக்க” சக்திவாய்ந்த “செயற்கை பொது நுண்ணறிவு” தொழில்நுட்பத்தை உருவாக்க OpenAI பந்தயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும், நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும் மஸ்க் குற்றம் சாட்டினார். OpenAIக்கு எதிரான எலோன் மஸ்க்கின் வழக்கு அவருக்கும் அவர் கண்டுபிடித்த ChatGPTக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலிலிருந்து உருவாகிறது.