இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது ; சர்ச்சையை கிளப்பும் எலான் மஸ்க்கின் கருத்து
இன்ஸ்டாகிராம் செயலியை பெண்களுக்கானது என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமூக ஊடகத் தளமான எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், மற்றொரு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமை தன்னுடைய மொபைல் போனில் இருந்து நீக்கி விட்டதாகவும், அந்த ஊடகம் முற்றிலும் பெண்களுக்கானது, இந்தச் செயலியால் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அந்த எக்ஸ் பயனரின் கருத்தை மேற்குறிப்பிட்டு எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கும், இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானதுதான் என்று மறு பதிவிட்டார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவானது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் பதிவு, பாலினப் பாகுபாட்டைப் பிரதிபலிப்பதாகவும், புண்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மே மாதத்திலும் இதேபோன்ற ஒரு கருத்தை எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது. என்னிடம் ஆண்கள் யாரேனும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களைப் பகிர்ந்தால், அவர்கள் பாலினம் மாறி விட்டார்களா என்ன? என்றுதான் எனக்குத் தோன்றும் என்று தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகிய இரு சமூக ஊடகங்களையும் உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும்நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகாலமாக போட்டியும் நிலவி வருகிறது.